Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

உளவு பார்த்தல்

581. §

திறன்மிக்க ஒற்றர், மதிப்புக்குரிய நீதிநூல்கள் இவை இரண்டும் அரசனின் கண்களாகக் கொள்க.§

582. §

நாள் தோறும் எல்லா மக்களிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் விரைவில் அறிவது அரசனின் கடமையாகும்.§

583. §

உளவு பார்ப்போர் தரும் இரகசியச் செய்திகளை ஆராயாது அரசன் என்றுமே வெற்றியை ஈட்ட முடியாது.§

584. §

செயலாற்றும் பணியாளர் தம் உற்ற உறவினர், தம் பகைவர் போன்ற அனைவரையும் ஆராய்ந்து அறிதல் உளவாளிகளின் முறைதவறாக் கடமையாகும்.§

585. §

சந்தேகம் ஏற்படுத்தாத மாறுவேடம், அகப்படின் அஞ்சா நெஞ்சம், இரகசியங்களைக் காட்டிக் கொடாத இயல்பு என்பன உடையவனே ஆற்றல் மிக்க உளவாளி.§

586. §

துறவிவேடம் பூண்டு முற்றுமுழுதாக ஆராய்ந்து எது நிகழினும் தன்னைக் காட்டிக் கொடாதவனே வல்லமைமிக்க உளவாளியாவான்.§

587. §

ஓர் உளவாளி அந்தரங்கச் செய்திகளை அறிந்து, அறிந்தவை யாவும் சந்தேகிக்க இடமற்றவை என உறுதிப் படுத்திக் கொண்டு செயலாற்றுதல் வேண்டும்.§

588. §

ஓர் உளவாளி தரும் செய்தியை நம்பு முன்னர் பிறிதோர் உளவாளி தரும் செய்தியுடன் ஒப்புமை பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்.§

589. §

உளவறிவோர் ஒருவரை ஒருவர் அறியாதவாறு விடுக. அவ்வாறு சென்ற மூவர் வந்து கூறுவனவற்றில் ஒப்புமை காணின் அதனை ஏற்றுக் கொள்க.§

590. §

உளவாளிகளின் ஆற்றலைப் பிறரறியப் பாராட்டலாகாது. அவ்வாறு செய்யின் தம் அறிதற்கரிய அந்தரங்கச் செய்திகளை வெளிப்படுத்தலாகிவிடும்.§