611. § | "இவ்வேலையைச் செய்வது மிகக் கடினம்" என மனந்தளர்ந்து கூற வேண்டாம். விடா முயற்சி அதனைச் செய்து முடிக்கும் ஆற்றலைக் கொடுக்கும்.§ |
612. § | எந்த வேலையையும் செய்து முடிக்கு முன் கைவிடாது காத்துக் கொள்க. தம் வேலையை நிறைவேற்றாதோரை உலகம் கைவிடும் என்பதை நினைவில் இருத்துக.§ |
613. § | யாவருக்கும் தாராளமாகக் கொடை அளிக்கும் பெருமிதம் அயராத முயற்சி எனும் அரும் பணியில் தங்கியுள்ளது.§ |
614. § | கடும் முயற்சி தவிர்ப்பவர் உபகாரம் செய்ய முயல்வது கோழையின் வாள் வீச்சைப் போல் தோல்வியில் முடியும்.§ |
615. § | இன்பத்தை விரும்பாது முயற்சியை நாடுபவன் தூண் போல் நின்று தன் குடும்பத்தினரைக் காப்பாற்றி அவர் துயரம் யாவற்றையும் துடைத்து விடுவான்.§ |
616. § | முயற்சி செல்வத்தைப் பெருக்கும் அஃதில்லாமை வறுமையை வளர்க்கும்.§ |
617. § | சோம்பல் உள்ளவன் மடியில் கருமகள் மூதேவி உறைவாள் என்றும் சுறுசுறுப்பு உள்ளவன் மடியில் திருமகள் சீதேவி உறைவாள் என்றும் கூறுவர்.§ |
618. § | செல்வச் செழிப்பு இல்லாமை எவர்க்கும் பழியாகாது. மெய்யறிவும் விடாமுயற்சியும் இல்லாமை இழிவாகும்.§ |
619. § | ஊழ்வினைப் பயனால் நிறைவேற்ற முடியாத காரியம் எனினும் உடல் உழைப்புக்கு உரிய ஊதியம் என்றும் பெறப்படும்.§ |
620. § | மனம் சோர்ந்து அயராமல் முயற்சியுடன் உழைப்பவர் விதி எனும் ஊழையும் தோல்வி அடையச் செய்வர்.§ |