Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

சோம்பல் தவிர்த்தல்

601. §

குடும்பம் எனப்படும் அணையாத விளக்கு சோம்பல் எனும் கருமுகில் மறைக்க அணைந்து விடும்.§

602. §

தம் குடும்பச் சிறப்பை மேலும் சிறக்கச் செய்ய விரும்புவோர் சோம்பலை "சோம்பலே" என்று ஒதுக்கி விட்டு முயற்சி மிக்கவராய் வாழ வேண்டும்.§

603. §

அழிவைத் தரும் சோம்பலோடு வாழும் மூடனின் குடும்பம் அவன் கெடுவதற்கு முன்பே அழிந்து விடும்.§

604. §

சோம்பலில் மூழ்கி முயற்சி செய்யாதவர் குடும்பச் சிறப்பு படி முறையாகக் கெட்டுக் குற்றங்கள் பெருகி விடும்.§

605. §

காலங்கடத்தல், மறதி, சோம்பல், உறக்கம் எனும் இந்நான்கு இயல்புகளும் சீரழிவை விரும்புவோர் செல்லும் மரக்கலம்.§

606. §

பெருஞ் செல்வம் உடையவரின் தொடர்பு கிடைத்த போது சோம்பல் உடையார் சிறப்பு மிக்க பயன் அடைய முடியாது.§

607. §

சோம்பலுக்காளாகி வளர்ச்சி தரும் முயற்சியில் ஈடுபடாதவர் பிறர் தம்மை இகழ்ந்து பேசும் சொல்லைக் கேட்க வேண்டியவராவர்.§

608. §

உயர் குடிமக்களைச் சோம்பல் தழுவிக் கொள்ளுமானால் அவர்கள் எதிரிகளின் அடிமைகளாகி விடுவர்.§

609. §

ஒருவன் தன் சோம்பற் குணத்தை மாற்றியதும் அவனுக்கும் அவனுடைய குடும்பத்துக்கும் ஏற்பட்ட அவமானம் ஒழிந்து விடும்.§

610. §

சோம்பல் சற்றேனும் இல்லாத மன்னன் கடவுள் தன் திருவடிகளால் அளந்த உலகப் பரப்பு முழுவதையும் பெற்றுக் கொள்வான்.§