Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

ஆராய்ந்து செயற்படும் முறை

461. §

செயல்களைத் தொடங்கு முன் அதனால் விளையும் நன்மை, கேடு, பின்னை வரும் ஊதியம் என்பனவற்றைத் தீர ஆராய்ந்து இறுதியில் செயற்பட வேண்டும்.§

462. §

காரியத்தைத் தொடங்கு முன், தேர்ந்தெடுத்த மக்களுடன் ஆராய்ந்து பின் தனித்திருந்து சிந்தித்துச் செயலாற்றுவோருக்கு எய்துவதற்கு அரியது எதுவுமேயில்லை.§

463. §

அறிவுள்ளோர் பின் வருஞ் செல்வத்தை நோக்கமாகக் கொண்டு கையிலிருக்கும் மூலதனத்தை இழக்குஞ் செயல் எதனையும் புரியார்.§

464. §

தமக்கு அவமானம் ஏற்படுவதை அஞ்சுபவர் மனத் தெளிவில்லாமல் எக் கருமத்தையுஞ் செய்யத் துணியார்.§

465. §

தீர ஆராய்ந்த உபாயமின்றிச் செயலாற்ற முற்படுதல் அது பகைவரின் வலிமையை நிலை பெறச் செய்வதற்கு ஒப்பாகும்.§

466. §

செய்யத்தகாததைச் செய்யின் அது அழிவைக் கொண்டு வரும். செய்ய வேண்டியதைச் செய்யாவிடின் அதுவும் அழிவே கொண்டு வரும்.§

467. §

சீராகச் சிந்தித்த பின்பே செயலாற்ற முற்பட வேண்டும். தொடங்கிய பின்பு சிந்திப்போம் என்பது மடமையாகும். §

468. §

முறையாக மேற்கொள்ளாத எச்செயலும் நிறைவாக முற்றுப் பெறாது. பின் பலர் கூடி நிறைவுறச் செய்ய முயலினும் குறையுள்ளதாகவே இருக்கும்.§

469. §

ஒவ்வொருவன் சுபாவத்தையும் அறிந்து அதற்கு ஏற்ப ஒழுகாவிடின் நல்லனவற்றைச் செய்யும் போதும் அவை கெடுதியானவையாக அமையலாம்§

470. §

பிறர் இகழாத வகையில் செயலாற்ற வேண்டும். பொருத்தமற்ற வகையில் செயலாற்றின் உலகம் அதனை ஏற்றுக் கொள்ளாது.§