Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கொடுப்பது கடமை என்று உணர்தல்

211. §

தரும் சிந்தனையுடையோர் கைம்மாறு கருதாது கடமை உணர்வோடு கொடுப்பர். மழை பொழியும் மேகத்துக்கு இவ்வுலகு என்றேனும் கைம்மாறு எதைத்தான் கொடுக்கும்?§

212. §

போற்றத்தக்கவர் அரும்பாடுபட்டுப் பொருள் தேடுவது அதைப் பெறத் தகுதி பெற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுதற்கேயாம்.§

213. §

இவ்வுலகத்திலோ தேவருலகத்திலோ புரியக் கூடிய கடமைகளுள் யாவற்றுள்ளும் தரும சிந்தையிற் சிறந்தது வேறில்லை.§

214. §

கொடை தன் கடமை என்று அறிந்தவனே உண்மையில் உயிர் வாழ்வான். ஏனையோர் இறந்தவருடன் எண்ணப்படுவர்.§

215. §

மக்களை நேசிக்கும் பேரறிவாளன் செல்வம் மக்கள் குடிக்கும் குளத்தில் நிறைந்திருக்கும் நீர் போன்றது.§

216. §

நல்லுள்ளம் படைத்தவரிடம் இருக்குஞ் செல்வம் ஊர் நடுவில் நிற்கும் பழமரத்தின் பழங்கள் போன்றது.§

217. §

தரும சிந்தனை உடையோன் கையிலுள்ள செல்வம் எல்லோர் நோய்களையும் தீர்க்கும் மூலிகைச் செடியை ஒக்கும்.§

218. §

இரவலர்க்கு உதவும் கடமை உணர்வுடையோர் தமக்கு வசதியற்ற வேளையிலும் கொடுப்பதற்குத் தயங்கார்.§

219. §

மனித குலத்துக்குத் தான் வழக்கமாக உதவும் வாய்ப்பற்ற போது தானே வறுமையுற்றவன் போல தரும் சிந்தனை உடையோன் எண்ணுவான்.§

220. §

தரும சிந்தனையால் பொருள் இழப்பு வரும் எனினும் அந்த இழப்பு தன்னையே விற்றுப் பெறத் தக்கதாகும்.§