Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அறத்தின் வலிமை

31. §

அறமானது விண்ணிற் சிறப்பும் மண்ணிற் செல்வமும் தருமாதலின் மனிதனுக்கு அறத்தினும் அதிக பயன் தருவது எது?§

32. §

அறத்தினும் சிறந்த பயன் தரவல்லது வேறெதுவுமில்லை அறத்தைக் கைவிடின் அழிவைத் தருவதும் வேறெதுவுமில்லை.§

33. §

நற்செயல்களைச் சளைக்காது செய்து விடுக, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இயலும் வகையில் ஆற்றி விடுக.§

34. §

மனம் தூய்மையைப் பேணுதலே அறச்செயல். மற்றெல்லாம் அறச்செயலன்றி வீண் வெளி ஆடம்பரமே.§

35. §

பொறாமை, கோபம், பேராசை, வன்சொல் எனும் இந்நான்கும் விலக்கி வாழ்வதே அறநெறி எப்படும்.§

36. §

நாளை செய்வோம் எனப் பின்போடாது இக்கணமே அறம் செய்க. அதுவே உடல் அழியுங்கால் தான் அழியாது உயிர்க்கு உறுதுணையாகும்.§

37. §

பல்லக்கில் செல்பவனுக்கும் அதனைச் சுமப்பவனுக்கும் உள்ள வேறுபாடே அறநெறியால் வரும் பலாபலனைத் தானாகவே உணர்த்தும்.§

38. §

அறச்செயல் புரியா நாளே இல்லை எனும்படி நல்லனவே செய்க. அது மறுபிறவிக்குச் செல்லும் வழியை அடைக்கும் பாறாங்கல் ஆகும்.§

39. §

அறச் செயலால் விளைவதே உண்மை இன்பம். மற்றைய எல்லாம் போலிகளே, அவற்றால் புகழுமில்லை.§

40. §

அறச்செயலே ஒருவன் வாழ்வில் செய்ய வேண்டியது. மறச்செயலே அவன் விலக்க வேண்டியது.§