21. § | மற்றெல்லாவற்றிலும் மிக உயர்வாக வேத நூல்கள் கூறுவது அறவழி வாழ்ந்து துறந்தார் தம் மகிமையையே.§ |
22. § | துறவியரின் பெருமையை எடுத்துக் கூற முயலின், அஃது இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தோரைக் கணக்கிடலை ஒக்கும்.§ |
23. § | இயற்கையில் சேர்ந்தே நிகழும் வாழ்தலும் மாளலும் போன்ற இரு தன்மைகளையும் சீர்தூக்கி நோக்கின் துறவு மேற்கொண்டோர் பெருமையினால் இவ்வுலகம் விளக்கமுறுகின்றது.§ |
24. § | புத்தி எனும் துறட்டியினால் ஐம்புலனடக்கி ஆளும் மனவுறுதியுடையவன் விண்ணுலகில் விளையும் வித்து ஆவான்.§ |
25. § | ஐம்புலனடக்கியோர் ஆற்றலோ மிகப் பெரிது விண்பேருலகின் வேந்தனாம் இந்திரன் தானும் அன்னார் சாபத்திற்கு ஆளாயினான்.§ |
26. § | பெரியோர் மற்றையோர் செய்ய முடியாதவற்றையும் செய்து முடிப்பர் சிறியோர் அங்ஙனம் செய்ய வல்லாரல்லர்.§ |
27. § | சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வல்லானே உலக இன்பங்களையும் கட்டுப்படுத்த வல்லான்.§ |
28. § | மறைமொழி உண்மையை வெளிப்படுத்தலால் அதனைக் கூறும் முன்னுணர்வோர் பெருமையும் உணரப்படும்.§ |
29. § | குணம் எனும் மாமலையில் ஏறி நிற்கும் துறவியரின் கோபத்தைக் கணநேரமும் பொறுக்கமுடியாது.§ |
30. § | எல்லா உயிரினத்திலும் கருணை காட்டி வாழ்தலால் துறவியர் அந்தணர் எனப்படுவர்.§ |